மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கு: பேராசிரியை நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்

மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோர்ட்டில் நேற்று ஆஜராகினர்.

Update: 2018-10-26 23:15 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டு அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவி, மதுரை பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததால், நிர்மலாதேவி உள்பட 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கருப்பசாமி, நீதிபதி லியாகத் அலியிடம் இந்த வழக்கு விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் எனக்கோரி மனு அளித்தார்.

பின்னர் இந்த மனு மீதான விசாரணை மற்றும் வழக்கு விசாரணையை வருகிற 29–ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஏற்கனவே கடந்த 3–ந் தேதி நடந்த விசாரணையின்போது, சி.பி.சி.ஐ.டி. சார்பில் இந்த வழக்கு விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது என்றும், கல்லூரி மாணவிகளின் நலன் கருதி, அவர்கள் பாதிக்கப்படாத வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்