குன்னூரில்: தேயிலை மகசூல் குறையும் அபாயம்

குன்னூரில் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தால், தேயிலை மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-10-26 22:00 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகளவில் தேயிலை பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பச்சை தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு உள்ளனர். குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மழை பெய்தது. இதனால் நிலம் ஈரப்பதத்துடன் இருந்தது. தற்போது பகல் நேரத்தில் வெயிலும், மாலை 6 மணிக்கு மேல் பனியும் இருந்து வருகிறது.

இதனால் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால், தேயிலை மகசூல் குறையும் அபாயம் காணப்படுகிறது. இதுகுறித்து உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு கூறிய தாவது:-

தற்போது குன்னூர் பகுதியில் நள்ளிரவு 2 மணி முதல் காலை 7 மணி வரை 11.7 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை உள்ளது. பகல் நேரத்தில் 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது. கடும் குளிரை ஏற்படுத்தும் பனி பொழிவுக்கு காரணம் வடகிழக்கு பருவமழை தாமதப்படுவது தான். கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்து வருகிறது. முதல் துரித வளர்ச்சி பருவ காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பச்சை தேயிலை மகசூல் நல்ல முறையில் இருந்தது.

ஆனால் 2-வது துரித வளர்ச்சி பருவ காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை பச்சை தேயிலை மகசூல் குறைவடையும் அபாயம் காணப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு ஹெக்டேரில் 900 கிலோ பச்சை தேயிலை மகசூல் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு 10 சதவீதம் குறைந்து ஒரு ஹெக்டேருக்கு 700 கிலோ மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்