நூதன முறையில் மூதாட்டியிடம் 2 பவுன் நகை அபேஸ்: டிப்-டாப் ஆசாமிகளுக்கு வலைவீச்சு

ஆரணி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் 2 பவுன் நகையை அபேஸ் செய்த டிப் - டாப் ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-10-27 23:15 GMT
ஆரணி,

ஆரணி - வந்தவாசி சாலையில் வேலப்பாடி இலங்கை அகதிகள் முகாமில் ராக்கம்மாள் (வயது 75) என்பவரிடம் நேற்று பகலில் 30 வயது மதிக்கத்தக்க டிப்-டாப் ஆசாமிகள் 2 பேர் முதுகுவலி, கழுத்துவலி, தசைப்பிடிப்பு போன்றவைகளுக்கு மின்சக்தி மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள், உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தகவல் தெரிவியுங்கள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என பேச்சு கொடுத்துள்ளனர்.

அப்போது ராக்கம்மாள் முதலில் தனக்கும், மருமகள் பிரியதர்ஷினிக்கும் சிகிச்சை அளியுங்கள் என்று கூறி வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் கழுத்து பகுதியில் ஸ்டிக்கர் போல் ஒட்டப்பட்டு ஒருவரையொருவர் பார்க்காதவாறு அமர செய்துள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் ராக்கம்மாளின் 2-வது மருமகள் அங்கு வந்துள்ளார். அவரிடம், டிப்-டாப் ஆசாமிகள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறி அவரை அனுப்பி உள்ளனர். உடனே டிப்-டாப் ஆசாமிகளில் ஒருவர் மோட்டார் சைக்கிளை தயார் நிலையில் வைத்துக்கொண்டும், மற்றொருவர் ராக்கம்மாள் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை கழற்றிக்கொண்டும் தப்பி சென்றனர்.

அதைத் தொடர்ந்து ராக்கம்மாளும், பிரியதர்ஷினியும் திருடன், திருடன் என அலறியவாறு வெளியே வருவதற்குள் டிப் - டாப் ஆசாமிகள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிப் - டாப் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்