தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க- காங். கூட்டணி வெற்றி பெறும் - மாநில பார்வையாளர் சஞ்சய் தத்

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க- காங். கூட்டணி வெற்றி பெறும் என மாநில பார்வையாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.

Update: 2018-10-27 22:45 GMT
கோவை,

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில பார்வையாளர் சஞ்சய்தத் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பார்வையாளர் சஞ்சய் தத் நேற்று மாலை கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியது பிரதமரின் கடமை. ஆனால், அவர் மவுனம் சாதிக்கிறார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, சி.பி.ஐ. அலுவலகத்தில் நள்ளிரவில் சோதனை நடத்தி, ஆவணங்களை அள்ளி சென்றுள்ளனர். பா.ஜனதா அரசின் ரபேல் போர் விமான ஊழல் வெளிவந்துவிடக்கூடாது என்பதால் சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் பந்தாடப்படுகிறார்கள்.

மோடியின் நடவடிக்கை நாட்டு மக்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. மோடி அரசு மொத்தமாக செயல் இழந்து விட்டது. மக்கள் செல்வாக்கையும் இழந்துவிட்டது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தனது ஸ்திரத்தன்மையை இழந்து நிற்கிறது. முதல்-அமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் லஞ்ச-ஊழலில் திளைக்கிறார்கள். மக்களை பற்றி கவலைப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியை, மோடி அரசு, ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்குகிறது. அகில இந்திய அளவில் மோடிக்கு எதிராகவும், பா.ஜனதா ஆட்சிக்கு எதிராகவும் அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் தலைமையில் ஒன்று திரள்கின்றன. வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். ராகுல்காந்தி பிரதமராக அமர்வார். தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சஞ்சய் தத் கூறினார்.

முன்னதாக, சஞ்சய் தத்துக்கு கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார் (மாநகர்), வி.எம்.சி.மனோகரன் (கோவை வடக்கு), சக்திவேல் (கோவை தெற்கு), முன்னாள் மாவட்ட தலைவர் பி.எஸ். சரவணகுமார் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ஈரோடு பழனிசாமி, அருள்பெத்தையா, விஜயகுமார், இருகூர் சுப்பிரமணியன், நவீன்குமார், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்