பிரிந்து சென்றவர்களை மீண்டும் அழைப்பது காலம் கடந்த ஞானோதயம் கரூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி

பிரிந்து சென்றவர்களை மீண்டும் அழைப்பது காலம் கடந்த ஞானோதயம் என கரூரில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2018-10-28 23:00 GMT
கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டில் சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என முதல்-அமைச்சர் கூறுவது அவரது பயத்தை வெளிப் படுத்தும் விதமாக உள்ளது. இதை வைத்து பார்க்கையில் அதில் முறைகேடு நடந்தது உண்மை தான் என சந்தேகம் எழுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜி மீண்டும் மாபெரும் வெற்றி பெறுவார். அங்கு அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்வோம். நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏக்கள் உரிய முடிவு எடுத்து சட்டரீதியாக சந்திப்பார்கள். மேலும் தலைமை கழகம் எடுக்கும் முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பினை தொடர்ந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.விற்கு வந்து இணையுங்கள் என கூறியதில் இருந்தே அவர்கள் வலிமையை இழப்பது புலப்படுகிறது. ஆனால் இது காலம் கடந்த ஞானோதயம் ஆகும். கசாப்பு கடையில் வெட்டுவதை போல் வெட்டி விட்டு, தற்போது நீர் அடித்து நீர் விலகாது என அவர்கள் பழமொழி பேசுவது வேடிக்கையாக உள்ளது. 90 சதவீதத்திற்கு மேலான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

பருவமழை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை நடத்தவிடாமல் இருப்பதில் இருந்து அ.தி.மு.க. செல்வாக்கு சரிவை சந்திப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

18 எம்.எல்.ஏக்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. அவர்கள் வழக்கில் ஜெயித்தால் ஆட்சிக்கு முடிவு வந்துவிடும் என எதிர்பார்த்தனர். அது நடக்காதது எங்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றமோ? அதைவிட அதிகமாக மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணருகிறோம். மேல்முறையீட்டிற்கு செல்ல 3 மாத கால அவகாசம் இருக்கிறது. தொகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விட்டு தீவிர ஆலோசனைக்கு பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்