கொடைக்கானல் அருகே பரபரப்பு: மதுபாட்டில்களை சாலையில் உடைத்து பெண்கள் போராட்டம்

கொடைக்கானல் அருகே மதுபாட்டில்களை சாலையில் உடைத்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-10-28 21:45 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பெருமாள்மலை, பேத்துப்பாறை பிரிவு, பி.எல்.செட், வடகவுஞ்சி பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மது விற்பனை நடந்து வருகிறது. இதுகுறித்து போலீசாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடக்கிறது. இதன்காரணமாக மதுப்பிரியர்கள் மதுவாங்கி அருந்தி விட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை கொடைக்கானல்-பழனி சாலையில் வடகவுஞ்சி பிரிவை ஒட்டியுள்ள பாண்டியன் நகர் பகுதியில் மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் சிலர் அங்கு திரண்டு சென்றனர். பின்னர் அங்கு மதுவிற்பனை செய்து கொண்டிருந்தவர்களை கண்டித்தனர்.

மேலும் அவர்கள் விற்பனைக்காக சாக்குமூட்டையில் வைத்திருந்த மதுபாட்டில்களை பிடுங்கி சாலையில் கொட்டி உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசாரும் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்