வையம்பட்டியில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

வையம்பட்டியில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-10-28 22:30 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 38). இவர் தற்போது வையம்பட்டி கே.எம்.ஜி.நகரில் வசித்து வருகிறார். மேலும் வையம்பட்டியில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பார்த்தசாரதி குடும்பத்தினருடன் மீனாட்சிபுரத்திற்கு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து நேற்று காலை அவரது வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பான தகவலை பார்த்தசாரதிக்கு தெரிவித்தனர்.

பின்னர் அவர் வந்து பார்த்த போது வீட்டின் சுற்றுச்சுவர் பகுதியில் இருந்து இரும்பு கதவு வழக்கம் போல் பூட்டி இருந்தது. ஆனால் வீட்டிற்குள் செல்லும் முதல் கதவும், பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

மேலும் பீரோவில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

கே.எம்.ஜி நகரில் கடந்த சில மாதங்களாகவே கொள்ளை சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. எனவே தொடர் கொள்ளை சம்பவங்களை தடுத்திட இரவு நேரத்தில் கூடுதல் காவலர்களை ரோந்து பணிக்கு அமர்த்திட வேண்டும் என்றும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்