வேலூர் அருகே மண் கடத்திய 7 பேர் கைது

வேலூர் அருகே மணல், மண் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-28 22:52 GMT
வேலூர்,

வேலூர் அருகே மணல், மண் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மண் கடத்த பயன்படுத்திய லாரி, டிராக்டர், 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் தொரப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கொணவட்டத்தை சேர்ந்த சூர்யா (வயது 21) மற்றும் 17 வயதுடைய வாலிபர் என்பதும், பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், விருதம்பட்டு போலீசார் டி.கே.புரம் பாலாற்றுக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மாட்டு வண்டிகளில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த விநாயகம் (41), ரமேஷ் (41) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மணலுடன் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசெல்வன், சீனிவாசன் மற்றும் போலீசார் அத்தியூர் பெரிய தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி, டிராக்டர் ஆகியவற்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். லாரி, டிராக்டரில் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வேலூரை அடுத்த ஜி.ஆர்.பாளையம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (23), சதீஷ்குமார் என்கிற காசி (28), அத்தியூர் சலந்தாமேட்டை சேர்ந்த தினேஷ் (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மண்ணுடன் லாரி, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டன.

மணல், மண் கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்