பெண்ணாடத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை - வேலையை விட்டு நீக்கியதால் விரக்தி

வேலையை விட்டு நீக்கியதால் மனவேதனையில் பெண்ணாடத்தில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-29 21:30 GMT
பெண்ணாடம், 


பெண்ணாடம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் தண்டபாணி (வயது 55). இவர் சென்னையில் உள்ள ஒரு மரக்கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டபாணி வேலை செய்த கடையில் ஏற்பட்ட பிரச்சினையில் அவரை கடையின் உரிமையாளர் வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த தண்டபாணி, சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்தினரிடம் சரிவர பேசாமல் தனக்கு வேலை இல்லை என்பதை கூறி புலம்பி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்ற தண்டபாணி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் தேடினர். அப்போது பெ.பொன்னேரி சுடுகாட்டில் உள்ள வேப்ப மரத்தில் தண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், தண்டபாணி வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்