தாய், மகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 150 பவுன்-ரூ.1 லட்சம் கொள்ளை: பிடிபட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

தாய், மகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 150 பவுன் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக 5 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-10-30 21:45 GMT
கூத்தாநல்லூர், 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி காந்தி தெருவை சேர்ந்தவர் தமிமுன்அன்சாரி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சம்சாத்பேகம் (வயது45), மகள் தமிமுன்யாஸ்மினுடன் பொதக்குடி காந்தி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று தாயும், மகளும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தாய், மகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டின் பீரோவில் இருந்த 150 பவுன், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் கூத்தாநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சம்சாத்பேகம் கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தர விட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் நகை, பணத்துடன் காரில் தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து கொள்ளையர்களை அடையாளம் காண போலீசார் முடிவு செய்தனர். அதன்படி பொதக்குடி, அத்திக்கடை, லெட்சுமாங்குடி, கொரடாச்சேரி, நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் வீடுகள், கடைகள் முன்பாக பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.

இதில் 5 பேரை போலீசார் அடையாளம் கண்டு கொண்டனர். இவர்களில் 2 பேர் பொதக்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். 3 பேர் வெளியூரை சேர்ந்தவர்கள். இவர்கள் 5 பேரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? கொள்ளையடித்த பணம், நகை எங்கு உள்ளது? என்பது போன்ற விவரங்கள் குறித்து போலீசார் கொள்ளையர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்