வெல்லத்தில் கலப்படத்தை தடுக்க ஆலைகள் கண்காணிக்கப்படும் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

வெல்லத்தில் கலப்படத்தை தடுக்க குழு அமைத்து ஆலைகள் கண்காணிக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

Update: 2018-10-30 23:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கையும், அதற்கு அதிகாரிகள் அளித்த பதிலும் வருமாறு:-

சுந்தரம்:- நாமக்கல் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டில் வேளாண் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்தி பயிர் பாதிப்பு ஏற்பட்ட செல்லப்பம்பட்டி அருகே ஏழூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இதுவரை காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படவில்லை. கொல்லிமலையில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி வரையிலான வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கவேண்டும். ஓமசமுத்திரம் ஏரியில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.

கலெக்டர்:- ஓமசமுத்திரம் ஏரி ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். இதுபோல் கொல்லிமலையில் இருந்து தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் வருவதில் உள்ள தடைகள் அகற்றப்படும்.

மெய்ஞானமூர்த்தி:- மானாவாரியாக நிலக்கடலை பயிரிட்டு மழை இல்லாததால் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு சாகுபடி செலவை நிவாரணமாக வழங்கவேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ‘ஏ’ வகுப்பு உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகையை வழங்கவேண்டும்.

இணைப்பதிவாளர்:- நமது மாவட்டத்தில் 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் லாபத்தில் இயங்குகின்றன. இந்த சங்கங்கள் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்படும். தற்போதுதான் தேர்தல் முடிந்துள்ளதால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்த பங்கு ஈவுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சரவணன்:- வேளாண்மை மானிய திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர். மானிய திட்டங்களுக்கு விவசாயிகளை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். இதற்கு முக்கிய காரணம் வேளாண்மைத்துறை அதிகாரிகள்தான். இதனால் முறைகேடுகளை தவிர்க்க வேளாண்மைத்துறை அலுவலர்களை பிற மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யவேண்டும்.

இதேபோல் பால் உற்பத்தியாளர்களுக்கு 25 நாட்களுக்கு மேல் பணம் வழங்கப்படாமல் உள்ளது. பண்டிகை காலம் என்பதால் பால் பணத்தை விரைந்து வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கலெக்டர்:- கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜேந்திரன்:- மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தவேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என சமீபத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில், கோரிக்கையை இந்த கூட்டம் வாயிலாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்லவேண்டும்.

நடேசன்:- நீராபானம் இறக்க உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தென்னைமரம் வைத்துள்ள விவசாயிகளுக்கு நீரா இறக்க அனுமதி அளிக்கவேண்டும்.

கலெக்டர்:- நீராபானம் இறக்குவது தொடர்பான நடைமுறைகளை தளர்த்தவேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

வையாபுரி:- பரமத்திவேலூர் ராஜவாய்க்கால் பகுதியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பகுதிகளை, நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பரமத்திவேலூர் பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் கலப்படத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கலெக்டர்:- வெல்ல ஆலைகளில் கலப்படத்தை தடுக்க குழு அமைத்து கண்காணிக்கப்படும். சேதமடைந்த வாய்க்கால் கரைகள் விரைவில் சீரமைக்கப்படும்.

அண்ணாமலை:- மரவள்ளிக்கிழங்குக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்க, மாவட்ட நிர்வாகம் முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தன.

முன்னதாக நுண்ணீர் பாசனதிட்டம் குறித்த துண்டு பிரசுரத்தை கலெக்டர் வெளியிட்டார்.

மேலும் செய்திகள்