சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-30 22:45 GMT
சேலம்,

ஓராண்டு பணி முடித்த தாசில்தார்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தாசில்தார் பணியிட மாற்றத்தில் முறையான முதுநிலை கடைபிடிக்கப்பட வேண்டும். வருவாய் துறை ஊழியர்களின் மேல் முறையீட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2 ஆண்டு பணி முடித்த வருவாய் ஆய்வாளர்களை உடனடியாக பணியிட மாறுதல் செய்ய வேண்டும். 2018-ம் ஆண்டு துணை தாசில்தார் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் பணியிடம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் ஆய்வுக்கூட்டங்கள் சரியான நேரத்திற்கு நடத்தி முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட வருவாய் துறை ஊழியர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் திடீரென கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் அர்த்தனாரி, துணை தலைவர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய் துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்களது கோரிக்கை குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய பதில் தெரிவிக்கும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு ஆகியோர் உங்கள் கோரிக்கை குறித்து ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10.15 வரை என 4¼ மணி நேரம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்