அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்ல மறுத்ததால் பரபரப்பு: கருணாஸ் கட்சியினர்– போலீஸ் அதிகாரி வாக்குவாதம்

கருணாஸ் கட்சியினர் தேவர் ஜெயந்தி விழாவுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்ல மறுத்து போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-30 22:48 GMT

சிவகாசி,

தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள சிவகாசியில் இருந்து 100–க்கும் அதிகமான வாகனங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் சென்றனர். பசும்பொன் சென்ற அனைத்து வாகனங்களும் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்கிறதா என தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்தநிலையில் சிவகாசியில் இருந்து புறப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏ.வின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியை சேர்ந்தவர்கள் வந்த 4 வாகனங்கள் போலீசார் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் மாற்றுப்பாதையில் சென்றது. இதனால், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் இந்த தகவலை மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து அந்த வாகனங்களை உரிய வழித்தடத்தில் திருப்பிவிட உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கருணாஸ் கட்சி நிர்வாகிகள் வந்த வாகனங்களை சிவகாசி–திருத்தங்கல் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியின் முன்பு மடக்கி நிறுத்தினர். அப்போது அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், அந்த வாகனங்களில் வந்தவர்களிடம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் மாற்றுப்பாதையில் ஏன் செல்கிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் ஊருக்குள் சென்று இன்னும் சிலரை அழைத்து செல்ல வேண்டும் என்றனர். இதற்கு போலீசார், வாகனங்களில் மாற்றுப்பாதையில் செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அந்த வழியாக வாகனங்களை இயக்க முயன்றனர். இதைதொடர்ந்து வாகனங்களில் வந்தவர்களுக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சோதனைச்சாவடி அருகில் வாகனங்களை நிறுத்தி ஆய்வுக்கு உட்படுத்துங்கள். அதற்குள் மற்ற நிர்வாகிகள் அங்கு வருவார்கள் என்று போலீசார் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்