கள்ளக்காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு: கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை

திருப்பூரில் மது குடிக்க பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பெண்ணின் மீது மண்எண்ணை ஊற்றி கள்ளக்காதலன், தீவைத்தார். சிகிச்சையில் இருந்த அந்த பெண் இறந்ததால் கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-10-30 23:17 GMT

திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்ஷா நகரை சேர்ந்தவர் அப்பாஸ்(வயது 36). இவர் ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயிலில் புத்தகம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஈரோடு ரெயில் நிலையத்தில் லட்சுமி(37) என்பவர் ரெயிலில் பனியன் ஆடைகளை விற்பனை செய்து வந்தார். அப்பாஸ் ஏற்கனவே திருமணமாகி தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதுபோல் லட்சுமியும் திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் அப்பாசுக்கும், லட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் சாதிக்பாட்ஷா நகரில் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் லட்சுமி இருந்துள்ளார். அப்போது அவரிடம் சென்று அப்பாஸ் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். கொடுக்க மறுக்கவே, கோபம் அடைந்த அப்பாஸ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து லட்சுமி மீது ஊற்றி தீவைத்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். லட்சுமி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து அப்பாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த லட்சுமி இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்