5 ரூபாயை கொடுக்காததால் ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் தாக்கிய பெண்; சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சிகள்

5 ரூபாயை திரும்ப கொடுக்காததால் ஆட்டோ டிரைவரை பெண் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.

Update: 2018-10-31 00:30 GMT
மதுரை,

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவை மறித்து ஏறினார். தெற்குவாசல் செல்ல வேண்டும் என அவர் ஆட்டோ டிரைவரிடம் கூறியதற்கு, அந்த டிரைவர் ரூ.15 தர வேண்டும் என கேட்டுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட அந்த பெண் இறங்கும் போது, 20 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். மீதி 5 ரூபாயை ஆட்டோ டிரைவர் கொடுக்காமல் அங்கிருந்து நகர முயன்றதாக தெரிகிறது. உடனே ஆட்டோ டிரைவரிடம் 5 ரூபாயை கேட்டதற்கு அவர் ஏதோ அந்த பெண்ணைப் பற்றி கூற தகராறு ஆனது.

இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண், ஆட்டோ டிரைவரின் சட்டையை பிடித்து இழுத்து நடுரோட்டில் வைத்து தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். அந்த பெண், ஆட்டோ டிரைவரை திட்டிக்கொண்டே கைகளால் தாக்கினார்.

இதை கேள்விப்பட்டு போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் வேகமாக வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

இந்த காட்சிகளை அங்கு கூடியவர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்