போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் - சீர்காழியில், ஜி.கே.வாசன்

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீர்காழியில் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2018-10-31 23:15 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழிக்கு நேற்று வருகை தந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமேயானால் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர இருப்பதால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். உரங்களின் விலை ஆண்டுதோறும் உயர்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு உர கம்பெனிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது. எனவே அரசு உரத்தின் விலையை உயர்த்தாமல் பார்த்து கொள்ள வேண்டும். நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

சுப்ரீம் கோர்ட்டு தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைத்திருப்பது குழந்தைகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். எனவே பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 2 மணி நேரமாகவும், இரவு 2 மணி நேரமாகவும் மாற்றி அமைக்க வேண்டும். கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு குடிநீர் வழங்குவதை திடீரென நிறுத்தி உள்ளது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும். தற்போது இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளது தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அரசின் செயல்பாடுகளை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். தமிழக அரசு மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவில்லை. இதனால் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், 20 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை நியாயமாக நடத்த வேண்டும். த.மா.கா. மக்களின் செல்வாக்கை படிப்படியாக பெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

பேட்டியின்போது நாகை வடக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் கார்த்திக், மாவட்ட இளைஞர் அணி தலைவர் வரதராஜன், நகர தலைவர் கனிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்