சாவில் சந்தேகம் என தந்தை புகார்: மாணவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை கொடுத்த புகாரின்பேரில், அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2018-10-31 22:51 GMT

சிவகாசி,

சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் கணேசன்(வயது 50). டிரைவர். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் ராஜ்குமார்(12). இவன் பள்ளப்பட்டியில் உள்ள பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தி தனது மகன் ராஜ்குமாருடன் சாட்சியாபுரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சாந்தி மீது மோதியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் மயங்கி கீழே விழுந்தான். பின்னர் அவனுக்கு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மறுநாள் காலையில் 6 மணிக்கு ராஜ்குமாரை எழுப்பியபோது அவன் இறந்து போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ராஜ்குமாரை பிரேத பரிசோதனை செய்யாமல் கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து விட்டனர். இந்த நிலையில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக, விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணேசன் புகார் அளித்தார்.

அதேபோல் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு கடம்பன்குளம் கண்மாய் பகுதிக்கு வந்த தாசில்தார் பரமானந்தராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சீனிவாசகன், டாக்டர்கள் திருமுருகானந்தம், கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் ராஜ்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கணேசன் அடையாளம் காட்டினார். இதைதொடர்ந்து மாணவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்