தனுஷ்கோடியில் பழமையான விநாயகர் கோவில் சீரமைக்கப்படுமா?

தனுஷ்கோடியில் மண்ணோடு மண்ணாக காட்சியளிக்கும் பழமையான விநாயகர் கோவிலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-10-31 23:02 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை. பல்வேறு கட்டிடங்களுடன் மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடி நகரம் கடந்த 1964–ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் புயலாலும்,கடல்கொந்தளிப்பாலும் தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்துபோனது.

இந்த அழிவில் இருந்து எஞ்சிய நிலையில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் ராமேசுவரம் கோவிலின் உபகோவிலான பழமையான விநாயகர் கோவில் மண்ணோடு மண்ணாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த விநாயகர் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி கோவிலை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர இதுவரை இந்து சமய அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தினமும் தனுஷ்கோடியை சுற்றி பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் இடிந்து கிடக்கும் கோவில் கட்டிடத்தை பார்த்து மிகுந்த வருத்தத்துடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே தனுஷ்கோடி கம்பிபாடு கடற் கரையில் புயலால் இடிந்து போய் கிடக்கும் பழமையான விநாயகர் கோவிலை சீரமைத்து உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த தமிழக இந்து அநிலையத் துறையும்,ராமேசுவரம் திருக்கோவில் நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும்,சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்