கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் சத்துணவு ஊழியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-11-01 22:45 GMT
பெரம்பலூர், 
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவு கட்டணமாக ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதேபோல பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

ஆனாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கடந்த 29-ந்தேதி முதல் 3 நாட்களாக சத்துணவு ஊழியர்கள் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தமிழக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று 4-வது நாளாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்தராசு தலைமை தாங்கினார். அப்போது சத்துணவு ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்