இனிப்பு பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற வேண்டும் - கலெக்டர் தகவல்

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம்பெற வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-01 21:45 GMT
சிவகங்கை, 


இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விவரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலர் அல்லது 94440 42322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்