பராமரிக்க முடியாததால் மனநலம் பாதிக்கப்பட்ட மகளை கொன்ற முதியவர் கைது

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பராமரிக்க முடியாத வேதனையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-01 22:00 GMT
மதுரை, 

மதுரை தெற்குவாசலை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 73). இவருக்கு செந்தில்குமார்(40) என்ற மகனும், கற்பகசுந்திரி(38) என்ற மகளும் உண்டு. இதில் கற்பகசுந்தரி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பக்கவாதத்தால் ஒரு கை, கால் செயலிழந்த நிலையில் இருந்தார். வீட்டிலேயே இருந்து வந்த அவரை வேலுச்சாமியின் மனைவி தான் கவனித்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி திடீரென்று இறந்து விட்டார். இதனால் கற்பகசுந்தரியை கவனிக்க முடியாமல் வேலுச்சாமி பரிதவித்து வந்தார். மகளை தன்னால் கவனிக்க முடியவில்லையே என்ற மனவேதனை அவரது உடல்நிலையையும் பாதித்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் பெற்ற மகளை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் அவர் நைலான் கயிற்றால் கற்பகசுந்தரியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.

அப்போது அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்தனர். அவர்கள் வேலுச்சாமியை தடுத்து நிறுத்தி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கற்பகசுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் கேள்விபட்டு செந்தில்குமார் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் இது குறித்து தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வேலுச்சாமியை பிடித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கற்பகசுந்தரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து பெற்ற மகளை கொலை செய்த குற்றத்திற்காக வேலுச்சாமியை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்