வேளாங்கண்ணி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் பறிமுதல்

வேளாங்கண்ணி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன்-மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-11-02 22:45 GMT
வேளாங்கண்ணி, 
நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் படியும் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் வேளாங்கண்ணி சரகம் மாணிக்கப்பங்கு பொதுஉடையார் கோவில் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சரக்கு வேனில் உரிய அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக சரக்கு வேன் டிரைவர் வேளாங்கண்ணி கறிக்கடை முச்சந்தியை சேர்ந்த அய்யாதுரை மகன் ராஜசிங்கம் (வயது 22), நரசிங்கமங்கலம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் முருகராஜ் (26), வேளாங்கண்ணி சிவன் கீழவீதியை சேர்ந்த பாலையன் மகன் முருகபாண்டியன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மனோகரன், வீரமணி ஆகிய 2 பேரையும் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்