டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் 8 வீடுகளுக்கு அபராதம்

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ள 8 வீடுகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2018-11-02 22:45 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை முருகாத்தம்மன்பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு கடந்த வாரம் மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

இதனையடுத்து படப்பை ஊராட்சியில் உள்ள முருகாத்தம்மன் பேட்டை, பெரியார் நகர், ஆத்தனஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மேலும் காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதரத்துறையின் சார்பில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சவுந்தர்ராஜன், மருத்துவ அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரபாபு ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது அந்த பகுதியில் உள்ள 8 வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் உள்ள தண்ணீர் தொட்டிகள், டயர், உரல், பழைய பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த 8 வீடுகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் சுகாதரத்துறை மூலம் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. ஊராட்சியின் சார்பில் கொசுமருந்து தெளிக்கப்பட்டு வருவதோடு டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் இருந்தால் குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.

ஊராட்சி சார்பில் டெங்கு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்ராஜ், ஊராட்சி செயலர் முகம்மது ஆரிப் மற்றும் படப்பை சுகாதார மேற்பார்வையாளர் உதயகுமார் ஆகியோர் உடன் இருநதனர்.

மேலும் செய்திகள்