திருவெண்ணெய்நல்லூர் அருகே: பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் - மாலை நேரத்தில் இயக்க கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாலை நேரத்தில் பஸ் இயக்க கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-11-02 21:45 GMT
அரசூர், 

திருக்கோவிலூரில் இருந்து டி.கொளத்தூருக்கு தினமும் காலை, மாலை இரு வேளையும் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் டி.கொளத்தூருக்கு காலை 8.50 மணிக்கும், மாலை 5 மணிக்கும் வருவது வழக்கம்.

ஆனால் கடந்த சில மாதங்களாக மாலை வேளையில் டி.கொளத்தூருக்கு பஸ் வருவதில்லை. இதனால் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு எளிதில் வர முடியாமல் மாணவ- மாணவிகள் மிகவும் அவதியடைந்தனர். அதுபோல் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து திருக்கோவிலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் நேற்று காலை டி.கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் 8.50 மணிக்கு வந்த அரசு டவுன் பஸ்சை திடீரென சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தினமும் மாலை வேளையில் பஸ் இயக்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளிடம் பேசி ஓரிரு நாளில் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் காலை 9.15 மணிக்கு தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு அங்கிருந்து அந்த பஸ் புறப்பட்டது.

மேலும் செய்திகள்