ராமநாதபுரம் இரட்டைக்கொலை சம்பவம்: சரண் அடைந்த 3 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை

ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2018-11-02 21:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கடந்த 16-ந்தேதி மாலை வாலாந்தரவையை சேர்ந்த கார்த்திக் மற்றும் கருவேப்பிலைக்கார தெருவை சேர்ந்த விக்னேஷ்பிரபு ஆகியோரை மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது தெரிந்ததே. பரபரப்பான இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் சரண் அடைந்த நிலையில் கேணிக்கரை போலீசார் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த அம்மன்கோவிலைச் சேர்ந்த பூமிநாதன்(வயது 40), பஞ்சவர்ணம் மகன் பாஸ் என்ற பாஸ்கரன்(36), அண்ணாநகரை சேர்ந்த பூசை மகன் பூமிநாதன்(45) ஆகியோர் மதுரை நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்-4ல் நீதிபதி முன்னிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சரணடைந்தனர்.

இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக கேணிக்கரை போலீசார் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 2-ல் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் மேற்கண்ட 3 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் மதுரை சிறையில் இருந்த அவர்கள் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் கார்த்திக், விக்னேஷ்பிரபு ஆகியோரை கொலை செய்தது தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்