சான்றிதழ் பெற்ற தீபாவளி பலகாரங்களையே விற்பனை செய்ய வேண்டும் கலெக்டர் ராஜாமணி தகவல்

உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் பெற்ற தீபாவளி பலகாரங்களையே விற்பனை செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-11-02 22:15 GMT
திருச்சி,

இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை காலம் தொடங்கி விட்டபடியால் அதிகமான உணவு சம்பந்தப்பட்ட, பலகாரவகைகள், இனிப்புகள், கார வகைகள், கேக்குகள், பேக்கரி பொருட்கள் முக்கிய இடத்தில் உள்ளது. பொது மக்களும் தங்கள் உபயோகத்திற்கும், நட்பு வட்டாரத்திற்கு பலகாரவகைகளை வழங்குவதற்கும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் போன்ற உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள், பேக்கரி மற்றும் விற்பனையாளர்கள், பலகார சீட்டு நடத்துபவர்கள் போன்ற அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி உணவு பாதுகாப்பு துறை மூலம் உரிமம், பதிவு சான்றிதழ்களை கட்டாயமாக பெற்றுதான் விற்பனை செய்ய வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ பயன்படுத்தக்கூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட பலகாரவகைகள், இனிப்புகள், கார வகைகள், கேக்குகள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றில் விவர சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளர் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு தேதி,பேக்கிங் செய்த தேதி, காலாவதியாகும் தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். இந்த உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்