கிருமாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி மாணவர் பலி அண்ணன் படுகாயம்

கிருமாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் பரிதாபமாகச் செத்தார். அவருடைய அண்ணன் பலத்த காயம் அடைந்தார்.

Update: 2018-11-02 23:28 GMT
பாகூர்,

கிருமாம்பாக்கத்தில் புதுச்சேரி-கடலூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பத்ம நாபன், தொழில் அதிபர். இவருடைய மனைவி பத்மாவதி, கிராம பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர். இவர்களின் மகன்கள் விக்னேஷ் (வயது 19), பிரவீன்குமார் (16).

விக்னேஷ், தாகூர் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். பிரவீன் குமார் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று காலை புத்தகம் வாங்குவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் புதுச்சேரிக்கு சென்றனர்.

புதுச்சேரி-கடலூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ஒரு தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விக்னேசும், பிரவீன்குமாரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இதைப்பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் சகோதரர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்கள் 2 பேரையும் டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில் மாணவன் பிரவீன்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருடைய அண்ணன் விக்னேஷ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக், ஏட்டு புவேனஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்