சாயல்குடி, கடலாடி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி

சாயல்குடி மற்றும் கடலாடி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2018-11-03 22:30 GMT
சாயல்குடி,
சாயல்குடி மற்றும் கடலாடி சுற்று வட்டார கிராமங்களிலும் தினமும் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துணை மின் நிலையங்களில் புகார் செய்தால் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக்கூறி அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஒருவார காலமாக இரவு, பகலாக நாளொன்றுக்கு 20 முறையாவது அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுஉள்ளதால் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு பொதுமக்களின் தேவை பூர்த்திஅடையாமலேயே ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதேபோல மின்சாரத்தை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும்போது குழந்தைகள் முதல் முதியவர் வரை தூக்கமின்றி தவிக்கின்றனர்.

கடலாடி மற்றும் சாயல்குடி மின்பகிர்மான வட்டங்களில் போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பயன் இல்லாமல் இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி சாயல்குடி மற்றும் கடலாடி மின் பகிர்மான வட்டங்களில் போதிய பணியாளர்களை நியமனம் செய்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்