தஞ்சை புறவழிச்சாலையில் மண் சரிவு மணல் மூட்டைகள் அடுக்கி வைப்பு

தஞ்சை புறவழிச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

Update: 2018-11-03 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தஞ்சையை சுற்றி புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டு தஞ்சையில் உலக தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது திருச்சி சாலையில் இருந்து பட்டுக்கோட்டை சாலை, கும்பகோணம் சாலை வழியாக திருவையாறு சாலை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

இதனால் திருச்சியில் இருந்து கும்பகோணம், நாகை நோக்கி சென்ற கார்கள், சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் எல்லாம் தஞ்சை நகருக்குள் வராமல் புறவழிச்சாலையிலேயே சென்று வந்தது. இதேபோல திருவையாறு சாலையில் இருந்து ஆலங்குடி, பிள்ளையார்பட்டி, சக்கரசாமந்தம், வண்ணாரப்பேட்டை, கள்ளப்பெரம்பூர் சாலையின் வழியாக திருச்சி சாலை வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதன்படி ரூ.42 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வாகன போக்கு வரத்தும் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் ரெயில்வே மேம்பாலம், வெண்ணாறு பாலம், கல்லணைக்கால்வாய் பாலமும் உள்ளது. வண்ணாரப்பேட்டை அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கூடுதலாக மண் சரிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சவுக்கு கட்டைகளை ஊன்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல சக்கரசாமந்தம் சாலையும், பைபாஸ் சாலையும் இணையும் இடத்தில் சாலையோரம் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்