மணமேல்குடி அருகே கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது டிரைவர் படுகாயம்

மணமேல்குடி அருகே கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் டிரைவர் படுகாயமடைந்தார்.

Update: 2018-11-03 22:30 GMT
மணமேல்குடி,

தூத்துக்குடியிலிருந்து, காரைக்காலுக்கு கிரானைட் கல் ஏற்றிக்கொண்டு நேற்று கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை முரளிதரன் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.

அப்போது காரக்கோட்டை பாலம் அருகே வளைவில் திரும்பும்போது, குறுக்கே மாடு ஒன்று சென்றது. இதனால் மாடு மீது லாரி மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி, டிரைவர் முரளிதரன் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த முரளிதரனை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்திற்குள்ளான லாரியில் இருந்த கிரானைட் கற்கள் அனைத்தும் மாற்று லாரி மூலம் காரைக் காலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்