பயணியிடம் துப்பாக்கி முனையில் நகை - பணம் பறித்தவருக்கு 4 ஆண்டு ஜெயில்

வாடகை காரில் சென்ற பயணியிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் பறித்தவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-11-03 23:15 GMT
மும்பை,

மும்பை பரேலை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி பைகுல்லா ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வாடகை காரில் ஏறினார். அப்போது, பிரவின் என்பவர் தான் மாட்டுங்கா செல்ல வேண்டும் என அவருடன் அந்த காரில் ஏறி அமர்ந்தார்.

இதற்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த பிரவின் தான் தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி என கூறிக் கொண்டு தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் மாட்டுங்கா வரை செல்வதற்கான கட்டணத்தையும் கொடுக்க வேண்டும் என்றார்.

காரில் சென்று கொண்டிருந்த போது, அவர் சுரேஷ் அணிந்து இருந்த தங்கச்சங்கிலி, மோதிரம் மற்றும் அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்து 500, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டார். இதுபற்றி சுரேஷ் அக்ரிபாடா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவினை கைது செய்தனர். மேலும் அவர் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய செசன்ஸ் கோர்ட்டு பிரவினுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்