தீபாவளி இனிப்பு தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு

தீபாவளி இனிப்பு தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது தரமான முறையில் தின்பண்டங்களை தயாரிக்க அறிவுறுத்தினார்கள்.

Update: 2018-11-03 22:45 GMT
தர்மபுரி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இனிப்புகள், காரவகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றை உரிய விதிமுறைகளை பின்பற்றி தரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் கலெக்டர் மலர்விழி உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பிருந்தா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர் தர்மபுரி நகரில் தீபாவளி இனிப்பு தயாரிப்பு கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சுத்திகரிக்கப்பட்ட தரமான சமையல் எண்ணெயில் இனிப்புகள் தயாரிக்கப்படுகிறதா? தடை செய்யப்பட்ட கலர் பவுடர்கள் இனிப்பு வகைகளில் சேர்க்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா? அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் சுத்தமாக இருக்கிறதா? என்பது குறித்தும் பார்வையிட்டனர்.

தரமற்ற முறையில் இனிப்பு, கார வகைகளை தயாரிக்கக்கூடாது. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று அப்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இதேபோன்று பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் இனிப்பு தயாரிப்பு கூடங்களில் திடீர் ஆய்வு நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்