உபேர், ஓலா டிரைவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

12 நாட்களாக நீடித்த உபேர், ஓலா டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2018-11-03 23:45 GMT
மும்பை,

மும்பையில் உபேர், ஓலா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் வாடகை கார்களை இயக்கி வருகின்றன. கார் வாடகையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு கார் ஓட்டும் டிரைவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சுமார் 50 ஆயிரம் வாடகை கார்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உபேர், ஓலா நிறுவன அலுவலகம் முன் திரண்டு வாடகை கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினையில் போக்குவரத்துத்துறை மந்திரி திவாகர் ராவ்தே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் அவர்கள் மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயாவையும் முற்றுகையிட்டனர். இந்த நிலையில், வாடகை கார் டிரைவர்கள் பிரச்சினையில் வருகிற 15-ந் தேதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி திவாகர் ராவ்தே தெரிவித்து உள்ளார். இதையடுத்து, 12 நாட்களாக நீடித்த வேலை நிறுத்த போராட்டத்தை வாடகை கார் டிரைவர்கள் வாபஸ் பெற்றனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் 15-ந் தேதியில் இருந்து பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

இதனால் நேற்று வழக்கம் போல உபேர், ஓலா வாடகை கார்கள் இயங்கின.

மேலும் செய்திகள்