பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்: தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை நெல்லையை சேர்ந்தவர்கள்

பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையால் விரக்தி அடைந்த நெல்லையை சேர்ந்த வாலிபர், தனது தாயுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-03 22:35 GMT
அம்பத்தூர்,

சென்னை கொரட்டூர் வாஞ்சி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஜான்ஞானமுத்து (வயது 60). இவர், எழும்பூர் பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அமலா (57). இவர்களுக்கு ஜோஸ்வா (29) என்ற மகனும், பியூலா (25) என்ற மகளும் உள்ளனர்.

இவர்களது சொந்த ஊர் நெல்லை ஆகும். கடந்த 6 ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். பியூலாவுக்கு திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார்.

பி.எஸ்சி. பட்டதாரியான ஜோஸ்வா, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பங்கு சந்தையில் முதலீடும் செய்து வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக ஜான்ஞானமுத்து கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து, தான் வேலை செய்யும் இடத்திலேயே தங்கி விட்டார். ஜோஸ்வா, தனது தாய் அமலாவுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் பியூலா, தனது தாயை பார்க்க வீட்டுக்கு வந்தார். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. அழைப்பு மணியை நீண்டநேரம் அடித்து பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.

தனது தாய் மற்றும் அண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் இருவரும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பியூலா, தனது தந்தை ஜான்ஞானமுத்துக்கு போனில் தகவல் தெரிவித்தார். எழும்பூரில் இருந்து கொரட்டூர் வந்த அவர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு ஜோஸ்வா, அவருடைய தாயார் அமலா இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டநிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொரட்டூர் போலீசார், தூக்கில் தொங்கிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் தற்கொலை செய்துகொண்ட அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஜோஸ்வா எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதி இருந்ததாவது:-

பங்கு சந்தையில் முதலீடு செய்து பெருமளவு லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்தேன். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக பலரிடம் கடன் வாங்கி முதலீடு செய்தேன். ஆனாலும் போதிய வருமானம் வராமல் நஷ்டம் ஏற்பட்டது.

எனது வேலையையும் சமீபத்தில் விட்டுவிட்டதால் கடன் சுமை அதிகமானது. குடும்பம் நடத்துவதே சிரமமாக இருந்தது. எனவே எனது தாயுடன் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் ஆசையாக வளர்த்து வந்த ‘டாமி’ என்ற நாயையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நாயையும் தன்னுடன் அழைத்துச்செல்வதாக அவர் கடிதத்தில் கூறி இருந்ததால், நாய்க்கு விஷம் வைத்து கொன்றாரா? என சந்தேகம் அடைந்த போலீசார், வீடு முழுவதும் தேடியும் நாயை காணவில்லை. அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அதன்பிறகு மதியம் அந்த நாய் வீட்டுக்கு உயிருடன் திரும்பி வந்தது.

சம்பவம் தொடர்பாக கொரட்டூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து அவருக்கு கடன் கொடுத்தவர்கள் யாராவது பணத்தை திரும்பக்கேட்டு அவரை மிரட்டினார்களா? அதனால் பயந்துபோய் அவர், தாயுடன் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜோஸ்வாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில் அவருடன் கடைசியாக பேசியவர்களின் எண்களை சேகரித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

பங்கு சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் தாயுடன், வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்