கர்நாடகத்தில் ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலுக்கு 5 பேர் பலி

கர்நாடகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Update: 2018-11-03 22:37 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும்  5 பேர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளனர். அதன்படி, தட்சிண கன்னடா மாவட்டத்தில் 3 பேர், ஹாசன், ஹாவேரி மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 5 பேர் இறந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம், கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுவதை உணர்ந்த மாநில சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.

முதல்கட்டமாக பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துவது, பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை நாடுவது, அரசு ஆஸ்பத்திரிகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை இருப்பு வைத்து கொள்வது என்று ஒவ்வொரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்