ஈரோட்டில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் தராததால் நகைக்கடை முற்றுகை

ஈரோட்டில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் தராததால், நகைக்கடை முற்றுகையிடப்பட்டது.

Update: 2018-11-03 23:02 GMT
ஈரோடு,

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் குறிஞ்சி (வயது 27). இவர் ஈரோடு, கோபி, கோவை, மேட்டூர் ஆகிய பகுதிகளில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நகைக்கடையில் ரூ.25 ஆயிரம் முதலீடு செய்ததால் மாதந்தோறும் வட்டியாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும் என கவர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதை நம்பி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நகைக்கடையில் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அறிவிக்கப்பட்டபடி மாதந்தோறும் வட்டி வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் கடந்த சில நாட்களாக சம்மந்தப்பட்ட நகைக்கடையை முற்றுகையிடுவதும் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுமாக இருந்தார்கள்.

பவானி அருகே உள்ள ஆலத்தூர் சூளைமேடு பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (23) என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நகைக்கடையில் ரூ.25 ஆயிரம் முதலீடு செய்திருந்தார். இதற்கான வட்டி, அசல் எதுவும் கொடுக்காததால் அவர் அதிருப்தி அடைந்தார். இதனால் அவர் நேற்று தனது உறவினர்கள், நண்பர்களுடன் வந்து ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள சம்பந்தப்பட்ட நகைக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து நகைக்கடையில் இருந்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பணம் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்