திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; விடிய விடிய போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் விடிய, விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

Update: 2018-11-03 23:11 GMT
தாளவாடி,

தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக பஸ், கார், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கிறது.

குறுகிய வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. மேலும் கவிழ்ந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு கெமிக்கல் பாரம் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும் பிய போது திடீரென லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றது.

இதனால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் அனைத்தும் பண்ணாரி சோதனை சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனை சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரி பழுது பார்க்கும் பணி நடந்தது. நேற்று காலை 10 மணி அளவில் பழுது சரி செய்யப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் விடிய, விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உணவு தண்ணீர் இன்றி அவதிப்பட்டனர். மேலும் கடும் குளிர் நிலவியது. குளிரில் குழந்தைகளுடன் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

மேலும் செய்திகள்