ராமநகர் அருகே மொட்டேதொட்டியில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்பு

ராமநகர் அருகே மொட்டேதொட்டியில் வாக்குச்சாவடிக்குள் பாம்பு புகுந்ததால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.

Update: 2018-11-03 23:16 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் ராமநகர் சட்டசபை தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் எல்.சந்திரசேகர் போட்டியிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் போட்டியில் இருந்து விலகினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்துகொண்டார். இதனால் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி என கூறப்படுகிறது.ஏற்கனவே வேட்பு மனு வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இதனால் எல்.சந்திரசேகர் போட்டியில் இருந்து விலகினாலும், அவர் பா.ஜனதா வேட்பாளர் என்றே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் உள்ளது.

இதனால் நேற்று காலை ராமநகர் சட்டசபை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடந்தது. இடைத்தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. இந்த நிலையில் ராமநகர் அருகே மொட்டேதொட்டியில் உள்ள அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு பொதுமக்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்த வாக்குச்சாவடியை சுற்றி புதர்மண்டி கிடக்கிறது. அந்த புதரில் இருந்து ஓட்டுப்பதிவு நடந்த சமயத்தில் ஒரு பாம்பு வாக்குச்சாவடி அறைக்குள் புகுந்துவிட்டது.

இதை பார்த்து, ஓட்டுப்போட வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அதுபோல் வாக்குச்சாவடி அலுவலர்களும் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதனால் ஓட்டுப்பதிவு தடைபட்டது. சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாக்குச்சாவடிக்குள் புகுந்த பாம்புவை ஒருவர் கம்பால் தூக்கி வெளியே போட்டார். இதன் காரணமாக அரை மணி நேர தாமத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கி விறு, விறுப்பாக நடந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்