செல்போன் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை

சேலத்தில் தந்தை செல்போன் வாங்கி கொடுக்காததால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-04 00:15 GMT
சேலம்,

சேலம் வீராணம் அருகே உள்ள தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் சேலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் வினிதா (வயது 19). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

வினிதா சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அதிகமாக கோபித்து கொள்வார் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஒரு செல்போன் வாங்கி தருமாறு வினிதா தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மாணவிக்கு செல்போனை வாங்கி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் வினிதா தந்தையிடம் கோபித்து கொண்டார். மேலும் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்த அவர் கயிற்றால் தனது கழுத்தை இறுக்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் வினிதா மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் வினிதாவை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி வினிதா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலத்தில் தந்தை செல்போன் வாங்கி கொடுக்காததால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்