சம்பளம், போனஸ் வழங்கக்கோரி ரோடியர் மில் ஊழியர்கள் சாலை மறியல்

சம்பளம், போனஸ் வழங்கக்கோரி ரோடியர் மில் ஊழியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-04 00:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி ரோடியர் மில் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கை குழுவினர் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். லே-ஆப்பை ரத்து செய்து மில்லை மீண்டும் இயக்க வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் நுழைவாயில் முன்பு அவர்கள் கூடினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு குழு தலைவர் வீரமுத்து தலைமை தாங்கினார். ஜெயபால் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் துணைத் தலைவர் சத்தியசீலன், அம்மைநாதன், இணை செயலாளர் ரவி, கமிட்டி உறுப்பினர்கள் இளங்கோவன், ஆறுமுகம், கபிரியேல் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் திடீரென புதுச்சேரி-கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்