நிலக்கோட்டை அருகே விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி - அக்காளை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்

நிலக்கோட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார். அக்காளை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-11-04 21:45 GMT
நிலக்கோட்டை, 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. அவருடைய மகன் திருப்பதிராஜா (வயது 20). இவர், திண்டுக்கல்லில் ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய அக்காள் நித்யாகலா. இவர், சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

தீபாவளியையொட்டி விடுமுறை எடுத்து அவர், சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இதற்காக அவர் பஸ் மூலம் செம்பட்டியில் வந்து இறங்கினார். அவரை அழைத்து வருவதற்காக, திருப்பதிராஜா தனது மோட்டார் சைக்கிளில் செம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நிலக்கோட்டை-செம்பட்டி சாலையில் செங்கோட்டை பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை திருப்பதிராஜா முந்த முயன்றார். அப்போது எதிரே வாகனம் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. அதன்மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பதிராஜா திருப்பியதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் லாரியின் சக்கரத்தில் சிக்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே திருப்பதிராஜா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அக்காளை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றபோது, விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்