குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதித்தனர்.

Update: 2018-11-04 22:30 GMT
தென்காசி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2-ந் தேதி இரவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் காலை குற்றாலம் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது.

இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே இந்த அருவிகளிலும் குளிப்பது ஆபத்து என்பதால் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று குற்றாலம் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை குறைந்த காரணத்தால், குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். நேற்று அருவிகளில் குளிக்க குறைவான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்