கம்பர் பிறந்த தேரழந்தூரில் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த கம்பர் கோட்டம் சீரமைக்க கோரிக்கை

கம்பர் பிறந்த தேரழந்தூரில் பராமரிப்பு இல்லாததால் கம்பர் கோட்டம் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-04 22:30 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் தாலுகா தேரழந்தூரில் கம்பர் கோட்டம் உள்ளது. கி.பி.12-ம் நூற்றாண்டில் கம்பராமாயணத்தை இயற்றிய கம்பர் பிறந்த ஊர் தேரழந்தூர் என்பதால், அவரது பெயரில் 1984-ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் கம்பர் கோட்டம் கட்டப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட கம்பர் கோட்டம் 1999-ம் ஆண்டு குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு மேலும் புதிய கட்டுமானங்கள் நடைபெற்று கம்பர் கோட்டத்தின் ஒரு பகுதியில் அரசு பொது நூலகம், மற்றொரு பகுதியில் திருமண மண்டபமும் அமைக்கப்பட்டன. கம்பர் கோட்டத்தின் முகப்பில் கம்பர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிகக்குறைந்த கட்டணத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கட்சி கூட்டம் தவிர்த்த பொது நிகழ்ச்சிகள், கம்பர் விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விடப்பட்டன.

பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த கம்பர் கோட்டம் தற்போது மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த கம்பர் கோட்டத்தின் நிகழ்ச்சி மேடையின் அலங்காரங்கள் உடைந்து தற்போது அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. மேடைக்கும், பார்வையாளர்கள் அமரும் மண்டபத்திற்கும் இடையில் கட்டிடத்தின் மேல் பகுதி விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த விரிசலின் வழியாக மழைநீர் மண்டபத்திற்குள் கசிந்து விழுகிறது. மேலும், அந்த விரிசல் பகுதி உள்ள மாடியின் மீது அரசமரம், வேப்ப மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. அந்த மரக்கன்றுகளின் வேர்கள் விரிசல் பகுதி வழியாக மண்டப கட்டிடத்திற்குள் ஊடுருவி பரவி உள்ளது.

கம்பர் கோட்டத்தின் மேடை மற்றும் மண்டபத்தில் இருந்த மின் விசிறிகளை கூட கழற்றி, குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மின்விசிறி இல்லாத காரணத்தால் தற்போது கம்பர் கோட்டத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைந்துவிட்டது. ஏழை மக்கள் மட்டுமே தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதோடு பகல் மற்றும் இரவு நேரங்களில் காவலர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது குடித்துவிட்டு பாட்டில்களை கம்பர் கோட்டத்தின் வளாகத்திலேயே உடைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் கம்பர் கோட்ட வளாகத்தில் பாட்டில் துகள்களாக கிடக்கின்றன. இதுகுறித்து குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பார்வையிட்டு பராமரிப்பு இல்லாத கம்பர் கோட்டத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்