வடகுடியில் தென்னை மரத்தில் கட்டப்பட்ட மின்கம்பம் அகற்றப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

நாகையை அடுத்த வட குடியில் தென்னைமரத்தில் கட்டப்பட்ட மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2018-11-05 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை அருகே உள்ள வடகுடி கிராமத்தின் தெற்கு தெருவில் மின்கம்பம் ஒன்று சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த மின்கம்பம் விழுந்து விடுவதை தடுக்க கம்பி மூலமாக அருகே உள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்துள்ளனர். காற்றில் தென்னை மரம் அசையும்போது மின்கம்பமும் அசைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதுகுறித்து வடகுடி கிராம மக்கள் கூறியதாவது:-

வடகுடி கிராமத்தில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை அருகே உள்ள தென்னை மரத்தில் கம்பியால் கட்டி உள்ளனர். காற்று பலமாக வீசும்போது தென்னை மரத்துடன், மின்கம்பமும் அசைந்து, அச்சுறுத்தி வருகிறது. இப்பகுதியில் வயல்கள் அதிகமாக உள்ளன. எனவே விவசாயிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி, வேறு மின் கம்பத்தை அமைக்காமல் அதை தென்னை மரத்தில் கட்டி வைத்திருப்பது ஆபத்தை அதிகரிக்க செய்துள்ளது.

மழைக்காலம் என்பதால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு தென்னை மரத்தில் கட்டி உள்ள மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர். 

மேலும் செய்திகள்