மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிப்பு : அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

காரைக்குடி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அங்கு பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2018-11-05 21:45 GMT
காரைக்குடி, 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுகாதார குறைபாடுகளால் பருவமழை சீசன் போது டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இந்த காய்ச்சல் மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவி வருகிறது. மாவட்டத்தில் முதன் முதலாக இந்த காய்ச்சல் காரைக்குடி சங்கராபுரம் பகுதியில் பரவத் தொடங்கியது. இதையடுத்து அங்கு துப்புரவு பணியாளர்கள் முகாமிட்டு பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் இந்த காய்ச்சலால் சிலர் பலியாகி உள்ளனர்.

இந்தநிலையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில் காரைக்குடி, சங்கராபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் அவதியடைந்து வருகின்றனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு, கடுமையான கை, கால், மூட்டு வலி, வறட்டு இருமல் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். வசதி படைத்த இன்னும் சிலர் காரைக்குடி, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிசிச்சை பெற்று திரும்புகின்றனர். இந்தநிலையில் காரைக்குடியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 10 நாட்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் காரைக்குடி அரசு மருத்துவமனை முன்பு சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் இல்லாததால் காலை முதல் மாலை வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாத்திரைகளை பெற்றுச் செல்கின்றனர். இதுகுறித்து மருத்துவமனையில் மருந்து வழங்கும் பணியாளர் ஒருவர் கூறியதாவது:- தற்போது காரைக்குடி பகுதியில் பரவி வரும் காய்ச்சலால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

அவர்கள் மாத்திரை, மருந்துகள் வாங்க வெகு நேரம் காத்திருக்கின்றனர். ஏனெனில் மருந்து கொடுக்கும் பிரிவில் 5 பேர் வரை பணியாற்ற வேண்டும். ஆனால் பணியாளர் பற்றாக்குறையால் தற்போது 2 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறோம். இதையடுத்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை வழங்கி வருகிறோம். அரசு விடுமுறை இருந்தாலும் கூட நாங்கள் எங்களது பணிகளை செய்து வருகிறோம். எனவே இங்கு கூடுதலாக பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்