கோவையில் வெவ்வேறு சம்பவங்களில்: ஒர்க்‌ஷாப் தொழிலாளர்கள் 2 பேர் படுகொலை - குடிபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்

கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் ஒர்க்‌ஷாப் தொழிலாளர்கள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். குடிபோதையில் அவர்களின் நண்பர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-11-05 22:00 GMT
கணபதி,


கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கவுசல்யா (22). இவர்களுக்கு 1½ வயதில் ஜெயஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் பிரவீன்குமாருக்கு போனஸ் கிடைத்து உள்ளது. அந்த பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் வெளியே சென்ற பிரவீன்குமார் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனுக்கு கவுசல்யா மற்றும் உறவினர்கள் தொடர்பு கொண்டபோதும் அவர் எடுத்து பேசவில்லை.

இதற்கிடையே நேற்று காலை 8 மணிக்கு பிரவீன்குமார் தனது வீட்டிற்கு செல்வதற்காக சங்கனூர் ரோடு வேதாம்பாள் நகர் 5-வது வீதி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், பிரவீன்குமாரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு தலை, கழுத்து உள்பட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இதனால் கீழே சரிந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யாசிக். இவர் அந்தப்பகுதியில் ஒர்க்‌ஷாப் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சச்சின் (25) உள்பட 6 பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் 6 பேரும் அந்த நிறுவனம் அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் இரவில் தாங்கள் வசித்து வந்த வீட்டில் அமர்ந்து மது அருந்தினார்கள். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென்று சச்சினுக்கும் மற்ற 5 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அனைவரும் சேர்ந்து கத்தி மற்றும் அரிவாளால் சச்சினை வெட்டினார்கள்.

இதில் அவருடைய தலை மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டு விழுந் தது. அத்துடன் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சச்சினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சினின் நண்பர்கள் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த 2 கொலைகள் தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

பிரவீன்குமார் மற்றும் சச்சினின் நண்பர்கள்தான் குடிபோதையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஏன் இந்த கொலைகள் நடந்தன என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் பிரவீன்குமார் கொலை தொடர்பாக அவருடைய நண்பர் சிவபிரகாசத்தை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து பார்த்தபோது, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் பிரவீன்குமாரின் நண்பர்கள்தான் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்ட சிவபிரகாசத்திடம் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்து உள்ளன. அதை வைத்து மேல் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்