தாமதமாக சூடு பிடித்த வியாபாரம்: ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி வியாபாரம் தாமதமாக சூடு பிடித்தது. இதனால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2018-11-05 22:15 GMT
ஊட்டி,

தீபாவளி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சமவெளி பகுதியில் கடந்த 1 வாரத்துக்கு முன்பாகவே தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி வியாபாரம் மந்தமாகவே இருந்தது. ஊட்டி நகரில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

ஊட்டி மார்க்கெட், சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்பட பல பகுதிகளில் பகல் 11 மணி வரை மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் மதிய வேளைக்கு பிறகு நகரில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் கடைகளில் வியாபாரமும் விறுவிறுப்பு அடைந்தது.

ஊட்டி கமர்சியல் சாலை பகுதியில் போலீசார் கோபுரம் அமைத்து அதில் நின்றவாறு கண்காணித்து வருகின்றனர். கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் திருடர்கள் பொதுமக்களிடம் கைவரிசை காட்டுவதை தடுக்க போலீசார் ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 350 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மாலை நேரத்தில் ஊட்டி நகரில் வியாபாரம் சூடு பிடித்தது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்தது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இருப்பினும் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தினர். மேலும் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பியது. இதேபோல் கூடலூர், குன்னூர் நகரிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் செய்திகள்