போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் கும்பகோணத்தில் நிறுத்தும் இடம் அமைக்க கோரிக்கை

கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன நெரிசலில் நகரம் சிக்கி தவிக்கிறது. இதனால் பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-05 22:45 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பல்வேறு சிறப்புகளை உடையது. கோவில் நகரம் என்று அழைக்கப்படும் இங்கு பிரசித்தி பெற்ற கும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் உள்பட 50-க்கும் மேற்பட்ட சைவ மற்றும் வைணவ கோவில்கள் உள்ளன. நவக்கிரக தலங்களுக்கு செல்லும் மைய நகரமாக கும்பகோணம் உள்ளது. பல பெரிய வணிக நிறுவனங்கள் கும்பகோணத்தில் தங்களது கிளை நிறுவனங்களை நடத்தி வருகின்றது.

கும்பகோணம் நகரில் 45 வார்டுகளும், சுமார் 250 தெருக்களும் உள்ளன. இதில் 20 தெருக்கள் முக்கியமானதாகும். கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கும்பகோணம் நகரத்தில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, கார் நிறுவனங்களின் எளிமையாக்கப்பட்ட கடன் வசதி போன்றவற்றால் கும்பகோணம் நகரத்தில் பயன்படுத்தப்படும் கார்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளது.

கும்பகோணம் நகரில் சுமார் 2ஆயிரம் கார்கள் சொந்த உபயோகத்துக்காகவும், வாடகைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கும்பகோணம் மற்றும் அதை சுற்றி உள்ள கோவில்களுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கார்களில் வந்து செல்கின்றனர்.

இந்த கார்களின் எண்ணிக்கையாலும், தினமும் கும்பகோணம் நகருக்குள் வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களினாலும் நகருக்குள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கும்பகோணம் நகருக்குள் வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சுற்றுலா வருபவர்கள் நகரின் முக்கிய சாலைகளில் கிடைக்கும் இடங்களில் கார்களை வரிசையாக நிறுத்தி செல்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் பேர் புதிய வீடுகளை விசாலமாக கட்டியிருந்தாலும், கார் நிறுத்த இடம் விட்டு வீடு கட்டியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து இயக்கப்படும் 2000 கார்களில் பெரும்பாலான கார்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகன நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கார் நிறுத்தும் இடம் அமைக்க கும்பகோணம் நகராட்சி தனி இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு இடம் ஒதுக்கினால் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலித்தால் நகராட்சிக்கு கணிசமான வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே கும்பகோணத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உடனடியாக வாகன நிறுத்தும் இடம் அமைப்பது அவசியமானதாகும். அதிகாரிகள் கவனிப்பார்களா? 

மேலும் செய்திகள்