விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-11-05 23:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மானாவாரி சாகுபடி பகுதியில் 3 ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு உரக்கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது, இருப்புப்பலகையில் இருப்பில் உள்ள ரசாயன உரங்களின் அளவு, அவற்றின் விலை ஆகியவற்றை தினமும் எழுதி அனைவருக்கும் தெரியும்படி கடை முகப்பில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

உரங்கள் வாங்கும் விவசாயிகள் அனைவருக்கும் பில் எந்திரம் மூலம் பில் வழங்க வேண்டும். எல்லா விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவைக்கு ஏற்ப உரங்களை பகிர்ந்து விற்பனை செய்ய வேண்டும். உரக்கடைக்கு உரங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. உரம் வாங்க செல்லும்போது விவசாயிகள் தங்கள் ஆதார் எண் விவரத்துடன் செல்ல வேண்டும். உரக்கடைகளில் உரமூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக வசூலித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனரிடமோ, வேளாண் அலுவலரிடமோ புகார் தெரிவிக்க வேண்டும்.

மேலும் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடிக்கு வந்துள்ளதால் ஏற்பட்டுள்ள தழைச்சத்து உரத்தேவையை கருத்தில் கொண்டு, வேளாண் இயக்குனர் அலுவலகத்திலும், உர நிறுவனங்களிடமும் தொடர்பு கொண்டு யூரியா உள்ளிட்ட உரங்கள் எந்தவித தட்டுப்பாடும் இன்றி விவசாயிகளுக்கு கிடைக்க தக்க நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்