தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளில் கூட்டம்: நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் ஜவுளி வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் திரண்டு வந்ததால், நாமக்கல் நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2018-11-05 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் நகரில் வாகன பெருக்கத்துக்கு ஏற்ப சாலை கட்டமைப்பு வசதி போதுமானதாக இல்லை. எனவே புறநகர் பஸ்நிலையம் அமைக்கவும், சுற்று வட்டப்பாதை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் விசேஷ நாட்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பட்டாசு மற்றும் ஜவுளி வாங்குவதற்கு நாமக்கல் கடை வீதிகளில் திரண்டு வந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இந்த கூட்டம் காரணமாக நாமக்கல் பிரதான சாலையில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போக்குவரத்து போலீசார் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டாலும், வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

வரும் ஆண்டில் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதிக்காமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்